Friday, January 21, 2011

அகத்தியர் உருவம்

இத்தகைய உயர்ந்த மார்க்கங்களைச் சொன்ன சித்தர் அகத்தியர் புராணங்களில் மற்றும் செவிவிழி கதைகளில் வர்ணிக்கப்படும்போது அவர் உருவம் நகைப்பிற்குரியதாய் உள்ளது. அகத்தியர் கட்டைவிரல் உயரம் உள்ளவர்; முழங்கால் உயரம் உள்ளவர் என்றும் தொப்பை வயிறாகவும் பருத்த உடம்பாகவும் குள்ளமான தோற்றம் உடையவர் என்றும் சித்தரிக்கப்படுகிறார். புராணங்களிலும் சினிமாவிலும் இப்படிக்காட்டப்படுவதால் இதை உண்மையென்றே மக்களும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். சித்தர்கள் காலம் கடந்தவர்கள்; வயது நிர்ணயிக்க முடியாதவர்கள்.

"கற்பமுறை கொண்டல்லோ யுகாந்த காலம்
காசினியில் இருப்பவனே சித்தனாமே"

அகத்தியர் பெருநூல் காவியம் (21000-இல்) "கற்பங்கள் சாப்பிட்டு யுகாந்த காலம் உலகில் என்றும் அழியாது இருப்பவனே சித்தன்" என்று கூறுகிறார். தூலமான உடல் கொண்டவர் சித்தராகார். அதாவது உடல் பெருத்தவர்கள் சித்தராக மாட்டார்கள். கற்ப சாதனைகளால் உடலை சித்தி செய்து மரணமில்லாமல் பல யுகங்கள் வாழ்பவரே சித்தர்.

"வாழ்கிறோம் சித்தரோடு ரிஷிகளெல்லாம்
மகத்தான கற்பூரதீபம் போலே
வாழ்கிறோம் காயத்தை ஒளிபோலாக்கி
அப்பனே கருவிடையம் சொல்லக்கேளு"

"சித்தர்கள், ரிஷிகள் எல்லாம் காயத்தை (உடம்பை) கற்பூரதீபம் போன்று ஒளி உடம்பாக்கி வாழ்கிறோம்"என்று அருள்மிகு கொங்கணவர் தன் கடைக்காண்டம் 500-இல் சொல்கிறார்.

"தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே
தேஜொளிவின் மயங்கொண்ட கும்ப யோனி
பானான பராபரத்துக்கு ஒப்பிதனை
பாருலகில் அகத்தியரை பகருவேனே"
                                                                                     - போகர் 7000

"அகத்தியரின் தேக ஒளி விண்நிறைந்த ஒளிப் பிழம்புக்கு நிகரானது" என்று போகர் கூறுகிறார். அகத்தியரின் சொரூபம் தேஜசுடன் கூடிய ஒளி நிறைந்தது என்று சொல்கிறார்.

"காயமதை அழியாமற் செய்வதற்குக்
கருத்தான சிவபோகங்கண்டு தேறு
மாயமுள்ள வாழ்வுதனை மறந்துப்போடு
மைந்தனே ஞானமதின் வழியில் நில்லே"
                                                                                     - அ.மி. சுகப்பிரம்ம ரிஷி

"காயத்தை அழியாமல் செய்வதற்குச் சிவயோகம் பயில வேண்டும்; அதற்கு ஞானவழியில் செல்ல வேண்டும்" என்று அருள்மிக சுகபிரம்மர் கூறுகிறார். சித்தரென்றால் காயத்தைச் சித்திபண்ணி ஒளி உடம்பாக்கி வெளியில் கலப்பர் என்பதாம்.

"ஏறாதுவாசி வலுவில்லாக் காயம்
என்னசெய்யு மண்பாண்டம் ஏதுக்காகும்
தேறாது உடல் வழுத்துப் பிராணம் குன்றில்
தெய்வஒளி காணரிது தேசட்தோர்க்கு"
                                                                                      - அ.மி. காசுபுசுண்டர்

Sunday, January 9, 2011

தமிழ்மொழிக்கு முதல் இலக்கணம் வகுத்தவர் அகத்தியர்!



தமிழ்மொழிக்கு முதல் இலக்கணம் வகுத்தவர் அகத்தியர் மாமுனிவரே! அவர் முத்தமிழ் சங்கத்தில் தலைமை பொறுப்பில் இருந்தார் என்பதும் தொல்காப்பியம் முன் அறியமுடிகிறது. அவர் இயக்கிய இலக்கண நூல அகத்தியம். தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியரும் அகத்தியர் மாரபில் வந்த சீடர்களில் ஒருவர் என்றும் தெரிகிறது. தமிழாய்ந்த புலவர்களால் வழி நடத்தப்பட்ட தமிழ்ச்சங்கத்தில் தலைமை வகித்த அகத்தியரும் சித்தராகவும், முனிவராகவும் போற்றப்படுகிற அகத்தியரும் ஒருவர்தான் என்பதை அவர் வழங்கிய பஞ்சகாவிய நிகண்டில் தெளிவுபட உறைக்கிறார்.

"வண்ணச் செந்தமிழ்ப் புலவோர் அகத்தியன் வாக்கிய
மாமுனிவோன் சொன்னமொழி மறைப்பிராது
எண்ணத்தால் தமிழ்ச்சிந்தாமணி இந்நூல்தான்
எல்லவரும் அறிந்திடினும் அறிவுள்ளாரே"

"புலவர் அகத்தியரே மாமுனிவரும் ஆவார். அவர் இயற்றிய செந்தமிழ் சிந்தாமணி ஆகிய நூல் எந்த மறைப்பும் இல்லாதது. எவர் படித்தாலும் அறிவுடையவர் ஆவர்" என்றும் கூறுவதில் இருந்து அகத்தியர் என்று பலர் இருக்கவில்லை. தமிழ்ச்சங்கத்தில் தலைமைவகித்த புலவர் அகத்தியரும் சித்தவர்கத்தில் முதன்மையானவர் என போற்றப்படுகிற அகத்தியரும் ஒருவர்தான் என்று மேற்கண்ட பாடல்களால் உருதிப்படுத்தப்படுகின்றது. அகத்தியர் ஒருவரே! அவர் புலவராகவும், சித்தராகவும், மாமுனிவராகவும் போற்றப்படுகின்றார். மக்கள் நல்வாழ்விற்காக வைத்தியம், சோதிடம், ஜாலம், யோகம், ஞானம் எனப் பல துறைகள் பற்றி பாடியுள்ளார். இலட்சக்கணக்கில் நூல்களாக்கிக் கொடுத்துள்ளார். குரு சீடர் பரம்பரை சித்தர் பரம்பரை. அதை உருவாக்கி, குருகுலம் அமைத்துத் தம்மை நாடி வருபவர்களுக்கு மேற்கண்ட கலைகளைப் போதித்து மனிதன் மனிதனாக வாழ்ந்து மரணமிலா பெரு வாழ்வு சாகக்கலையையும் கற்றுக் கொடுத்து உயர்த்தியுள்ளார். சித்த நெறியில் ஒழுகுவோர் பஞ்சமா பாதகங்கள் தவிர்த்து தாமரையிலை தண்ணீர் போல் உலகை விட்டு விலகாமல் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து வாழ நெறிகள் போதித்துள்ளார். யோகிகள் என்று வேடம் புனைந்து யாசித்து வாழ்வது சித்தர் நெறி ஆகாது. இதை அகத்தியர் வன்மையாகக் கண்டிக்கிறார். அதனாள் சித்தர்நெறி ஒழுகுவோர் பிழைக்கவும் பல கலைகள் கற்பித்தார். அதில் இரசவாதமும் ஒன்று. மட்டமான ஒரு உலோகத்தை முப்பு போன்ற மருந்துகளைக் கொண்டு தங்கமாக்கி விற்று உண்பதற்கு வழி சொல்லி உள்ளார்.